ஷங்கர். 24/ஆ. மயிலை. சென்னை.

படித்தது பி.எஸ்.சி இயற்பியல், சென்னை விவேகானந்தா கல்லூரியில். அடுத்து எம்.சி.ஏ பட்ட மேற்படிப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில்.

இப்போது சென்னை சோழங்கநல்லூரில் இன்·போசிஸ் நிறுவனத்தில் கணினிப்பொறியாளன். ஒன்றரை வருட அனுபவத்தில் தின்று கொழுத்துத் திரிந்துகொண்டிருக்கும் சென்னையின் சராசரி இளைஞன். தாயின் மொழி தெலுங்கு. தாய்மொழி தமிழ்.

கிட்டத்தட்ட பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பே குடும்பச் சூழலில் தமிழ் நிறைய இருந்தது. வீட்டில் புத்தகங்கள் படிப்பவர்கள் நிறைய. குறிப்பாகத் தமிழ்ப் புத்தகங்கள். இரண்டு அறிவுஜீவிகள்: அண்ணனும் (சிலந்தியார்), அத்தை பையனும். சின்ன வயதிலேயே அவர்கள் கவிதை, கையெழுத்துப் பத்திரிகை, கதை என்று கலக்க, பியர் ப்ரஷரில் பினாத்தலாக ஆரம்பித்ததுதான் என் தமிழ்.

நல்ல ஆசான்கள் வழிகாட்ட, ஆரோக்கியமாகவே என் தமிழ் வளர்ந்தது. பொறியியல் நுழைவுத்தேர்வில் ஊத்திக்கொண்டதால் பி.எஸ்.சி எடுக்க, அங்கும் தமிழ். அருமையான நண்பனின் வழிகாட்டுதலில் சிறந்த புத்தகங்கள், இதழ்கள் என்று என் விடுதியறையில் தமிழ்மணம்.

அண்ணா பல்கலையில் கவனம் சென்றதும் இலேசான வாசிப்புடன் நின்றுவிட்ட தமிழ், மீண்டும் தலையெடுத்தது ஒரு சந்தோஷமான விபத்து. தமிழ் வலைப்பூக்களில் ஆர்வம் கொண்ட அண்ணன் அறிமுகத்தில் சென்ற வருட இறுதியில் விளையாட்டாக வலைப்பதியத் தொடங்கியது என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். இந்த ஒரு வருட காலத்தில் சம்பாதித்த நட்பும், அனுபவமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.

வைத்து நடத்தாமலுள்ள வலைப்பதிவுகள்:

சுவடுகள்
இருக்கிறது*இல்லை - குவாண்டம் இயற்பியல் குறித்த அறிமுகம்

சுவடுகளுக்குத் தற்பொழுது மறுபிறவி. குவாண்டத்துக்குக் கூடிய விரைவில் புதிய பிறவி.

தமிழில் அறிவியல் குறித்து நிறைய எழுத ஆர்வமும், நன்றாகவே செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. படைப்பிலக்கியம் குறித்து எனக்கிருக்கும் ஆர்வங்கள் என்னோடே இருப்பது தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்லது.