குத்துவிளக்கு என்றதும் உங்களுக்குக் கோவிலும் பூஜையறையும்தான் நினைவுக்கு வரும். இனிமேல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார்கோயில் என்ற ஊரும் நினைவுக்கு வரவேண்டும். ஏனெனில் குத்துவிளக்கு பெயர்பெற்றது இவ்வூர். இங்கு செய்யப்படும் விளக்குகள் உலகப்புகழ் பெற்றவை.

இவ்வூரில் 1998-ம் ஆண்டு, 22 குழந்தைகளுடனும் இரு ஆசிரியர்களுடனும் தொடங்கப்பட்டதுதான் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி. தற்போது, இங்கு 75 குழந்தைகள் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இப்பள்ளி உருவானதே பெரிய கதை. பள்ளி தொடங்க மூலகாரணமாக இருந்தது தமிழர் உறவின் முறை அறக்கட்டளைதான். சாதி, மதம் என்பதெல்லாம் இல்லை என்ற கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து அமைத்த அறக்கட்டளை இது. இவர்களை எல்லாம் உறவினர்களாய் ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை அம்பத்தூர், திருப்பூர, கோபி ஆகிய இடங்களில் உள்ள தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளிகளைப் பார்வையிட்டு வந்தனர். பின் அவற்றைப் போல நம் ஊரிலும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்பள்ளியை உருவாக்கினர்.

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மொட்டு, மலர் என்று அழகிய கமிழில் பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளின் கழுத்தை இறுக்கும் கழுத்துப்பட்டையோ, காலை இறுக்கிப்பிடிக்கும் காலுறையோ இல்லை. எளிய, எடுப்பான சீருடையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்கள் மழலைச் செல்வங்கள். புத்தக மூட்டையெல்லாம் அவர்கள் சுமப்பது கிடையாது. விளையாட்டுப் பொருள்களும் கல்விக்கான எளிய துணைக்கருவிகளும் அவர்களுக்குப் பிடித்த தோழர்கள்.

ஆசிரியர்களை மேடம், சார் என்று அழைக்காமல் இனிய தமிழில் அக்கா, அண்ணன் என்று பாசமுடன் குழந்தைகள் அழைப்பதைக் கேட்டு மகிழக் காதுகள் கோடி வேண்டும்.

வகுப்பில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான நடைமுறைச் சொற்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். வகுப்புக்கு வருவோரை, எழுந்து நின்று “வணக்கம், வெற்றி உறுதி” என்று கூறி அன்புடன் வரவேற்கிறார்கள். விடைபெறும்போது “நன்றி மீண்டும் சந்திப்போம்” என்று கனிவுடன் வழியனுப்புகிறார்கள்.

இப்பள்ளியின் அரசுப் பாடத்திட்டத்துடன் தாய்த்தமிழ்த் கல்விப்பணி அமைப்பின் இணைப்பாடத் திட்டமும் சேர்த்தே கற்பிக்கப்படுகிறது. நான்காம் வகுப்புக்கு கணினிப் பயிற்சி தரப்படுகிறது. விரும்பும் குழந்தைகள் நடனப் பயிற்சி பெறலாம். உடல் நலம் குறித்து விழிப்புணர்வு பெற உடற்பயிற்சியும் உண்டு.

மூன்றாம் வகுப்பு முதல் வாரம் ஒரு முறை நண்பகல் உணவாக இயர்கை உணவு கொண்டுவர ஆசிரியர்கள் மாணவர்களை அறிவுறுத்துகிறார்கள். மாணவர்களும் அதை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழில் தேர்வெழுதி எம்.டி.(பொது மருத்துவம்) முடித்த டாக்டர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் மாதம் இருமுறை இப்பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் மாணவர்களை ‘வாங்க’ என்று மரியாதையுடன் அழைப்பதை வேறு எந்தப் பள்ளியிலும் பார்க்க முடியாது.

“தொடக்கத்தில் வழக்கமான பள்ளிகளை அறிந்தவர்களுக்கு எங்கள் பள்ளியின் செயல்பாடு வித்தியாசமாக தெரிந்தது. மாணவர்களை மரியாதையுடன் நடத்துகறொம்”. மாணவர்களை அடிப்பது, கடுஞ்சொற்களால் திட்டுவது இங்கில்லை.

மாணவர்களுக்குப் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ தனிப்பயிற்சி கூடாது என்பதில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறொம். உளவியல் அடிப்படையிலேயே மாணவர்களை அணுகுகிறோம்.

“மாணவர்களின் முன்னெழுத்தாக (இனிஷியல்) தாய்-தந்தை இருவரின் முதல் எழுத்தையும் பயன்படுத்துகிறோம்” எனப் பள்ளியின் புதுமைகளைப் பட்டியலிடுகிறார் தாளாளர் சோலை மாரியப்பன்.

கடுமையான நிதிநெருக்கடியிலும் இங்கு ஆறு ஆசிரியர்கள நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் விளங்குகிறது.

ஆண்டு விழாவுக்கு வந்திருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், இப்பள்ளிக்கு நன்கொடையாக பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியதை நன்றியுணர்வுடன் குறிப்பிடுகிறார் தாளாளர்.

பள்ளி ஆண்டு விழாவில் தமிழ் இசைப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாடப்படும் தமிழரின் திருநாளாம் பொங்கல் விழா இப்பள்ளியின் தனிச்சிறப்பு. பொதுமக்கள், குழந்தைகள், அவர்களின் பெற்றோர் பொங்கலை குடும்ப விழாவாகக் கொண்டாடி மகிழ்வது கண்கொள்ளாக் காட்சி. இவ்விழாக்களில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது உண்டு.

“பள்ளியை வளர்த்தெடுக்க அரசு அங்கீகாரம் தேவை. ஆனால், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப இடவசதியோ கட்டட வசதிோ இல்லை. இதுதான் இப்பள்ளியின் பெரும் பிரச்சினை. விரைவில் அனைவரின் ஒத்துழைப்புடன் பெறுவோம்” என்று நம்பிக்கை பொங்கக் கூறிகிறார்கள் ஆசிரியர்களும் மாணவர்களும்.

மறைந்து வரும் தமிழ்க் கலாசாரம், தமிழ்ப் பண்பாடு, தமிழ்ப் பாரம்பரியம் ஆகியவற்றை இளம் பருவத்தில் இருந்தே கற்றுத்தருகிறது இப்பள்ளி. தமிழர் அடையாளங்களும் தமிழ் உணர்வும் கொண்ட மாணவ, மாணவியரை இப்பள்ளி உருவாக்குவது உறுதி.