பேரன்புடையீர், வணக்கம்.

தமிழ்நாடு, கும்பகோணம், நாச்சியார்கோயில் தாய்த்தமிழ் தொடக்கபள்ளிக்காக, தமிழர் உறவின்முறை கல்வி அறக்கட்டளை சார்பாக தங்களை இணையம் வழி தொடர்பு கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறொம்.

தாய்மொழிக் கல்வி முலமே ஒரு குழந்தையின் முழு ஆளுமையை வெளிக்கொணர முடியும். கல்வியாளர்களும் உளவியலாளர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். உலக நாடுகளின் நடைமுறையும் இதுதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் சூழலோ விதிவிலக்காக உள்ளது. ஆங்கிலத்தில் படித்தால் மேதமை, உலகம் முழுக்க வேலை வாய்ப்பு என்ற தவறான கருத்தாக்கம் விதைக்கப்பட்கிருக்கிறது. வீதிகோறும் வணிகமயமான, எந்த அடிப்படை வசதியுமற்ற, ஆங்கில வழிப் பள்ளிகள். இன்றைய நாளில் வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்தரவாதமுமற்றவர்களுக்குத்தான் அரசு நடத்தக்கூகிய இலவச தமிழ்வழிக் கல்வி என்கிற நிலை.

ஆக ஆங்கில வழிக் கல்வியும், நுகர்வு கலாச்சாரமும், தனியார் தொலைக்காட்சியும் பிறங்கடையினரை (சந்ததியினரை) இம்மண்ணின் வேரிலிருந்து பிய்த்து எறிந்துவிட்டது.

நம் மண்ணை, நம் மக்களை மீட்டெடுத்து, தற்சிந்தனை (சுயசிந்தனை), தற்சார்பு உடையவர்களாய் மிளிரச்செய்யும் முயற்சியாய் தோழர் தியாகு அவர்களாள் சென்னை – அம்பத்தூரில் முதல் தாய்த்தமிழ்த் தொடக்கபள்ளி 1993-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.

இதன் நீட்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்ப்பட்ட தாய் தமிழ் தொடக்கபள்ளிகள், மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் 22 பள்ளிகள் தாய் தமிழ் கல்வி பணியில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தபடுகிறது. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவைப்படுகின்ற பாடத்திட்டமும் உருவாக்கப்படுகிறது.

தமிழர்கள் ஒன்றிணைய தடையாய் இருக்கும் சாதியை, சாதிமறுப்புத்

திருமணம் புரிதல் மூலம் ஒழிக்காமால், தமிழர் ஒற்றுமை சாத்தியப்படாது என்கிற புரிதலுடன் சாதி மறுப்புத் தமிழர்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான் “தமிழர் உறவின்முறை”.

இதன் மற்றொரு பணியாய் தமிழர் உறவின்முறை கல்வி அறக்கட்டளையின் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி 1999-ஆம் ஆண்டு தொடங்கியது. இப்பள்ளியில் இன்று மொட்டு (L.K.G), மலர் (U.K.G) முதலாக 5-ஆம் வகுப்பு வரை 93 மாணவர்கள் பயில்கின்றனர்.

ஒரு முன்மாதிரி பள்ளியாய் செயல்படுகிறது எம் பள்ளி. இப்பகுதிகளில் நடைபெறும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் எம் பள்ளி மாணவர்கள் பரிசினை வென்று வருகின்றனர். சென்ற ஆண்டு “தினமணி” நாளிதழ் நடத்திய மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் எம் பள்ளி மாணவர் முதல் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் வென்றுள்ளனர்.

சென்ற ஆண்டு நடந்த பள்ளியின் நான்காம் ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட “படைப்பாக்கக் கண்காட்சி” பொது மக்களின் பாராட்டுகளை பெற்றது.

இப்பள்ளியின் நடைமுறை, செயல்பாடுகள் குறித்து 11-01-2003 நாளிட்ட தினமணி “சிறுவர்மணி” இதழ் சிறப்பாக கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்விதழின் படியை இத்துடன் இணைத்துள்ளோம்.

இப்பள்ளி, அறக்கட்டளை உறுப்பினர் திரு சோலை மாரியப்பன் இல்லத்தில் கீற்று கொட்டகையில், இடநெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால் அரசின் அங்கீகாரம் பெற முடியவில்லை. இதுவே பெற்றோர்கள் தம் குழந்தைகளை இப்பள்ளிக்கு தொடர்து அனுப்புவதற்கு பெருந்தடையாக உள்ளது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகமும், அறக்கட்டளையும் கலந்துபேசி பள்ளிக்கென தனி இடமும், கட்டட வசதியும் பெற சுமாராக ரூ.15,00,000/- (ரூபாய் பதினைந்து இலட்சம்) தேவை என மதிப்பிட்டோம். இத்தொகையை அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நன்கொடையாக திரட்டுவது என்றும், அறக்கட்டளை மூலம் கல்வியில் அக்கறை கொண்ட, தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட தனிநபர் மற்றும் அமைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு திரட்டுவது என்றும் முடிவு செய்துள்ளோம்.

காசோலைகள்/வரைவோலைகளாக அனுப்பி உதவிட விழையும் அன்பர்கள் தாளாளர், தாய்த்தமிழ்த் தொடக்கபள்ளி என்ற பெயரில் (கனரா வங்கி ஸ்ரீநகர் காலனி கிளை, கும்பகோணம், கணக்கு எண்: 18234) அனுப்பித்தருமாறு வேண்டுகிறோம்.

தாங்கள் எங்களின் இந்த முயற்சிக்கு பொருளுதவியுடன் ஆதரவும், அறிவுரையும் தங்களால் இயன்ற வழிகளால் வழங்கிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.