தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் சென்ற  23-12-2007 அன்று தமிழ்ச் சங்கம் இராமநாதபுரம் நடத்திய   குதந்ழைச் செட்டியார் நினைவு விழாவில் பரிசு பெற்ற கதைகள்.

 tamizhsangam@yahoo.com

கவிஞர் உரப்பளி ஜெயராமன் - முதற்பரிசு

 

மஞ்சத்தண்ணி சிறுகதை ஆக்கம் ; உரப்புளி ஜெயராமன்

(முதற் பரிசு பெற்ற சிறுகதை - குழந்தைச் செட்டியார் நினைவு விழா - தமிழ்ச்சங்கம் முகவை-23-12-2007)


"அக்கா, அக்கா" என்று யாரோ கூப்பிடுவது கேட்க, தம்பி காத்தவராயன் தான் வந்திருக்கிறான் என்று யூகித்தவளாய்க் கதவைக் திறந்தாள் நாகம்மா.

காத்தவராயன் தான். அக்காவைப் பார்த்தான். அவள் முன்னைவிட பொலிவாய்க் கவலையில்லாமல் இருப்பது தெரிந்தது.

அக்காவைக் கட்டிக் கொடுத்து ஐந்தாறு வருஷமாய்ப் பிள்ளையில்லாமல் போக, புருஷன் முதக்கொண்டு எல்லோரும் மலடியெனச் சொல்லாத குறையாய்த் திட்ட, காத்தவராயன் தான் அவளுக்கு ஆறுதல் சொல்லுவான்.

'நம்ம குலதெய்வம் அங்காளம்மா உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டா. நிச்சயம் உனக்கு ஒரு கொழந்தையைக் கொடுப்பா... இதை அவள் நிறைவேத்திக் கொடுத்தாள்னா, அவ வாசலிலே கிடாய் வெட்டி பொங்க வைக்கிறேன்' என்று வேண்டுதலும் செய்தான்.

அவன் வேண்டியது பலித்ததுபோல் அக்காவுக்கு பெண்குழந்தை பிறந்தது. சரசுன்னு அதுக்குப் பேரு. இப்ப மூணாம் வகுப்பு படிக்குது.

போனதடவை பை நிறைய பலகாரமாய் அவன் வந்தபோது, அதுக்கு அம்மை போட்டிருக்க, ஒன்றும் கொடுக்காமல் அப்படியே திரும்பிப் போயிருந்தான் காத்தவராயன். .

மருமகக்குட்டிக்கு அம்மா இறங்கி தண்ணில்லாம் ஊத்திட்டியாக்கா?”

மூணுதண்ணி ஊத்தியாச்சு" என்றவள், அவன் கையில் ஆட்டுக்குட்டியிருந்ததால் உள்ளே வரச்சொல்ல யோசித்து, "இதன்னப்பா ஆட்டுக்குட்டி" என்று கேட்டாள்.

மறந்திட்டியா அக்கா. உனக்கு பிள்ளை பிறந்தா நம்ம அம்மன் கோயிலுக்கு கிடாய் வெட்டுறதா நேர்ந்தேன்ல. உன் மக பிறந்தும் எட்டு வருஷமாச்சு. எழைகடன் ஏழு வருஷம்னு சொல்வாங்க. ஏழையும் தாண்டிருச்சு. சரசுக்குட்டிக்கும் அம்மை வேறு போட்டிருச்சு. அநத அம்மன் தான் அதிலிருந்தும் காப்பாத்திக் கொடுத்திருக்கா. இனிமேலும் இந்தக் கடனை செலுத்தத் தாமதிக்கக் கூடாது. ஆறுமாசத்துக்கு முன்னாலே என் ஆடு குட்டி போட்டுச்சு. அது குராக்குட்டியா இல்லாம கிடாய்க் குட்டியா இருந்தா அதையே வளர்த்து அம்மனுக்கு பலி கொடுத்துறதுன்னு நெனைச்சேன். கிடாய்க் குட்டி தான். ஆறுமாதமா பால் குடிச்சிச்சு. மூணு நாளைக்கு முன்னாலேதான் பால்குடி மறந்துச்சு. ரோட்டு ஒரமா என் கடை இருக்குறது உனக்குத் தெரியுமே. துருதுருன்னு திரியுற இந்தக் குட்டியை என்னாலே பாதுகாப்பா வளர்க்க முடியலை. தெய்வத்துக்கு நேர்ந்தது நொண்டியா குருடா போயிடக் கூடாது. அத்தானிட்டேயும் சொன்னேன். சரிடா, வளர்த்து வெட்டுவம்டான்னாரு. இந்தாபிடி" என்று ஆட்டுக்குட்டியை அக்காளிடம் நீட்டினான் காத்தவராயன்.

வீட்டிலிருந்து வெளியே வந்த சரசு, "ஹய்யா...ஆட்டுக்குட்டி ,என்ன அழகா இருக்கு" என்று ஓடி வந்தாள்.

மருமகப் பொண்ணே, இனிமே இதை நீதான் வளர்க்கப்போறே" என்றான் காத்தவராயன்.

அவன் மடியிலிருந்து 'மே...ய்...மே...ய்' என்று கத்திக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டி, சரசுவைக் கண்டதும் அமைதியாய் இருந்தது.

சரசு அதன் முதுகைத் தொட்டுப் பார்த்தாள். அம்மாவின் பட்டுப் புடவையைத் தொட்டதுபோல் மிருதுவாய் இருந்தது. பால் வெள்ளையும், கறுப்புமாய் பின்னிப் பிணைந்த அதன் தோற்றம் அவளைக் கொள்ளை கொண்டுவிட்டது. அதன்

 

 

 

 

 

 

 நீண்ட காதுமடல்களையும், நிமிர்ந்திருக்கும் கறுப்புக்குஞ்ச மெனத்தெரியும் வாலையும்

பிடித்துப் பிடித்துப் பார்த்தாள் சரசு.


ஆட்டுக்குட்டியைக் கொடுக்கிறே... என் வீட்டுக்காரரும் சரின்னு சொன்னதாய்ச் சொல்றே... சின்னக்குட்டியா இருக்கு... இது என்ன சாப்பிடும் ... எப்படி வளக்கனும்னு விபரமாச் சொல்லிட்டுப் போப்பா...” என்றாள் நாகம்மா.


அக்கா, இப்ப ஒண்ணு ரெண்டு பல்லு போட்டிருக்கு இதுக்கு. அதனாலே இலைதழையை நொறுநொறுன்னு கடிக்கும். அதோட நாம சாப்பிடுற எதையும் கொடுக்கலாம். வடிச்ச தண்ணி கூட குடிக்கும். “


இட்லி சாப்பிடுமா, மாமா?”


நீ சாப்பிடுற எல்லாம் சாப்பிடும், போதுமா குட்டி?” என்று சரசுவை வாரியெடுத்து நெற்றியில் முத்தமிட்டான்.


காத்தவராயனும் சரசுவும் ஆட்டுக்குட்டியைக் கொட்டத்திலுள்ள ஒரு முளைக்கொம்பில் கட்டினார்கள்.


மாமா, முதமுதல்லே பால் கொடுப்பமா?” என்றாள் சரசு.

கொண்டாத்தா"


பால் வந்து சேர்ந்தது. அதை ஒரு சிறு வாளியில் ஊற்றி வைக்க ,முதலில் மூக்கு நுனியில் ருசி பார்த்து "நல்லா இருக்கு" என்று எல்லோரிடமும் சொல்வது போல் தலையைத் தூக்கிச் சொல்லிவிட்டு, முழுதையும் குடித்து முடித்தது. அதன் தாடையில் பால் வழிந்தோடியது.


சரசு தன் கையால் அதன் தாடையைத் துடைத்தாள்.


மாமா புறப்பட்டுப் போன பின்பு, சரசு ரெம்ப நேரத்தைக் கொட்டத்தில் தான் கழித்தாள். புத்தகத்தோடு அது எதிரே வந்து உட்கார்ந்து விடுவாள்.


ஏண்டி அதுக்கென்ன பாடமா நடத்துறே" என்று அதட்டுவாள் நாகம்மா.


நான் எந்த எழுத்தைச் சொன்னாலும் அது ஒரே எழுத்தைத் தான்மா திரும்பத் திரும்பச் சொல்லுது."


என்ன எழுத்துடி" ஆவலோடு மகளைப் பார்த்தாள் நாகம்மா.


எல்லாத்துக்கும் மே ன்னுதான்மா சொல்லுது".

நாகம்மாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அம்மாவை ஏமாற்றியதில் சரசுவும் சிரித்துத் தீர்த்தாள்.

ஆட்டுக் குட்டியின் வாளிப்பும், அது இங்குமங்கும் குதிக்கும் அழகும் எல்லோரின் கவனத்தையும் சுண்டி இழுத்தது.

நாகம்மா புருஷன் ராமசாமி ,அதுக்கு ரெண்டு இலை தழையைக் கொண்டாந்து

போடுறதோடு சரி; அப்புறமாக் கண்டுக்கிறதே இல்லை.

' நம்ம பிள்ளை ஆட்டுக்குட்டியோடு ரெம்ப பிரியமா இருக்கு'ன்னு புருஷனுட்டே

சொல்லக்கூட பயம் அவளுக்கு.

கொல்லையிலிருந்து தலைவாசல் வரை சரசு முன்னால் ஓட , ஆட்டுக்குட்டி பின்னால் ஓடும்.நாகம்மாவுக்கு, ' என்னடி, ஆட்டுக்குட்டியை வீட்டுக்குள்ளே ஓட விடுறே' என்று மகளைத் தடுக்கத் தோணவே இல்லை.' ஒரு பிள்ளையாட்டம்ல துள்ளித்

துள்ளி ஓடுது' என்று மூக்கில் விரலை வைப்பாள்.

அடுப்படியிலும் சரசுக்குச் சமமா நின்னு அவள் கொடுக்கிறதை அது சாப்பிடுறபோது கோட அதை விரட்டவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் புருஷன் இருக்கும்போது மட்டும், ஆடு கொட்டத்தில் இருக்கும்படியாய்ப் பார்த்துக்கொள்வாள் நாகம்மா.

சரசு படிக்கிற பள்ளிக்கூடம் ஊரைத் தாண்டி இருந்தது. அவள் பள்ளிக்கூடம் புறப்படும் போது இதுவும் அவளுடன் புறப்பட்டது.

தன்னோடு படிக்கிற சிறுமிகளுக்கெல்லாம் தன் ஆட்டுக்குட்டியை அறிமுகம் செய்து வைத்தாள் சரசு. அது எல்லோரையும் ஒரு முறை பார்த்து விட்டு, சரசுவின் பின்னால் நடந்து போகும்.

அவள் பள்ளிக்குப் புறப்படுவதைக் கொட்டத்தில் நின்றபடி பார்க்கும். அவள் ஊதாப் பாவாடை தெரிந்ததும், கயிறை அறுத்துக் கொண்டு பாயப்பார்க்கும்.

'அடியே சீக்கிரம் வாடி' என்று மற்ற சிறுமிகள் அவசரப்படுத்த "நான் சாயந்திரமா உன்னை கூட்டிட்டுப் போறேன்" என்று சரசு ஆட்டுக்குட்டியைச் சமாதானப் படுத்தி புறப்படுவாள். அவள் கொஞ்சம் தூரம் நகன்றதும், ரெண்டு கால்களையும் உயரத்தூக்கித் தூக்கிக் குதிக்கும்.

நேரமாச்சுமா- நான் பார்த்துக்கிறேன்" என்று சின்னக்கம்பால் ஆட்டுக்குட்டியை அடிப்பாள் நாகம்மா.

அடிக்காதேம்மா" என்று திரும்பித்திரும்பிப் பார்த்தபடி செல்வாள் சரசு.

ஒருநாள், சரசுவும் சிறுமிகளும் பாதி வழி போய்க்கொண்டிருந்த போது, 'மேமே' என்று சத்தம் தொடர, திரும்பிப் பார்த்தார்கள்.

அந்த ஆட்டுக்குட்டி தான் ஒடிவந்து கொண்டிருந்தது.

இதென்னடி, இது இவளிட்டே இப்படி ப்ரெண்டா இருக்கு. இதுக்கும் ஒரு சீட் வகுப்பிலே கொடுத்துறச் சொல்வமா?”.

அப்படின்னா பேரு கேப்பாங்களே" என்று ஒருத்தி கேலியாகச் சிரித்தாள்.

அவ்வளவுதான் .ஆளுக்காள் பேர் வைக்க ஆரம்பித்தார்கள்.

ராமுக்குட்டி" என்றாள் ஒருத்தி.

ஏண்டி ராமு வாத்தியார் உன்னை அடிக்கிறார்னுதானே அந்தப்பேர் வைக்கிறே".

முத்துக்குட்டி"

இந்தப் பேரைச்சொல்லி நாம எப்பவாவது கூப்பிட, முத்துச்சரம் டீச்சரு மொத்த வந்துருவாங்கடி".

மீனாக்குட்டி"

ஏண்டி என் பேரையா வைக்கிறே"

கடைசியா ராசுக்குட்டி என்று ,சரசு வைத்த பெயரையே வைத்து விடுவதாக அவர்களுக்குள் முடிவானது..

ராசுக்குட்டி வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. அதன் தலையில் கொம்புகள் முளைப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

அடியே சரசு, ஆட்டுக்குட்டிக்கு கொம்பு முளைக்கப் போகுது. முன்னாடி மாதிரி அதிட்டே போகாதே. முட்டித்தள்ளிடும்" நாகம்மா மகளை எச்சரித்தாள்.

'உன்னை நான் முட்டுவனா? உன் அம்மா பேச்சைக் கேக்காதே' என்பது போல் ராசுக்குட்டி சரசுவைப் பார்த்தது.

'அம்மா சொல்றது உண்மைதான். ராசுக்குட்டி இப்ப நல்லா வளர்ந்துருச்சு. கால்களெல்லாம் நீளமாத் தெரியுது. வாயைத் திறந்தா ரெண்டு வரிசைக்கும் பல் நெடுகத் தெரியுது' என்று வியந்தாள் சரசு.

நாலுவிரக்கடை உயரம் கொம்பு வளர்ந்ததும், வீட்டுக்குப் புதிதாய் வரும் ஆட்களையெல்லாம் முட்டித் தள்ளியது ராசுக்குட்டி.

அன்று காத்தவராயன் வந்தபோதும் அதுதான் நடந்தது.

நான் வளர்த்த குட்டி என் மேலே பாய்ஞ்சிருச்சே. வளர்த்த கடா மாருலே பாயுமின்னு சும்மாவா சொன்னான்க" என்று அங்கலாய்த்தான் காத்தவராயன்.

நாகம்மா அந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்தாள்.

அக்கா இந்த வருஷ களரிக்கு ஆட்டை வெட்டிறலாம். சாமிக்கு நேர்ந்த கிடாய்னா சும்மாவா- கொழுகொழுன்னு வளர்ந்துருச்சேக்கா".

நானா வளர்த்தேன். உன் மருமகப் பொண்ணுல வளர்த்துச்சு"

அப்போது சரசுவும் அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டாள்.

ஏக்கா, இந்தத் தம்பிக்கு ஒண்ணுமட்டும் செய்யுக்கா"

என்னப்பா"

ஆட்டை வெட்டுனதும், ஈரலை வதக்கி மருமகப் பெண்ணுக்குக் கொடுக்கறதோடு எனக்குக் கொஞ்சம்கொடு"

உனக்கு இல்லாமலா?”

அப்போது பார்த்து சரசு ஏதோ சைகை செய்ய, ராசுக்குட்டி ஒடிவந்து காத்தவராயன் தொடையில் முட்டியது.

என் ஈரலைக் கேட்டியாடா?” என்று கேட்பது போலிருந்தது அதன் பார்வை.

"சரசுதான்பா ஏவி விடுறா - இது நில்லுன்னு சொன்னா அது நிக்குது - இது போன்னு

சொன்னா அது போகுது"

சின்னப்புள்ளைக்கா”, என்ற காத்தவராயன், "களரிக்குச் சொல்லிடு "என்று புறப்பட்டான்.

ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வருகிறபோது, தொலைவில் நாகம்மாவோடு நின்ற ஆட்டுக்குட்டி 'ராசுக்குட்டி' என்று சரசுவும், சிறுமிகளும் கத்த ,நாலுகால் பாய்ச்சலில்

வேங்கைப்புலியாய் வயல்களில் தாவி, ரோட்டிற்கு வந்து, அவர்களோடு கலந்தது.

அதன் வேகத்தை மெச்சிய ஒரு சிறுமி, “இதபாருடி சரசு, அது என்னதான் உன் மேலே பாசமா இருந்தாலும் அதை ஒரு நாள் வெட்டித்தான் சாப்பிடப் போறீங்க" என்றாள்.

என்னடி சொல்றே", என்று ஆத்திரப்பட்ட சரசு,சொன்னவளின் பிடரியைப் பிடித்தாள்.

விடுடி சரசு, அவளைவிட்டுறு"

பிடியைத் தளறவிட்டாள் சரசு.

நிதானமா நான் கொல்றதைக் கேளு.”

வெயில் கொளுத்துதுடி. அந்த மரத்தடிக்குப் போய்ப் பேசுவோம்.”

எல்லோரும் மரத்தடிக்குச் சென்றார்கள். அது ஒரு ஆலமரம். அடிக்கும் காற்று இதமாய் இருந்தது.

ராசுக்குட்டி நிழலில் தெரிந்த புற்களை மேயத் தொடங்கியது.

போனவருஷம் குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடப் போனமா? ஆடு வெட்டுற இடத்துக்கு வரக் கூடாதுன்னு என் அம்மா தடுத்துச்சு. மறைஞ்சிருந்து பார்த்தேன். ஆட்டை என்ன செய்யுறாங்க- மாலை போட்டு அங்கே இழுத்துட்டு வர்றாங்க. ஒரு பெரிய அரிவாளை தலைக்கு மேலே ஓங்கியபடி ஒரு ஆளு நிக்கிறாரு. குண்டாவிலே மஞ்சத்தண்ணி இருக்கு. அதை அள்ளி ஆட்டுத்தலையிலே தெளிக்கிறான் ஒரு ஆள். அப்ப பாரு- அந்த ஆடு ஒரு சிலிர்ப்பு சிலுக்குது. ஒரு ஆளு அதன் தலையைக் கயிறைக் கட்டி இழுக்கிறான். இன்னொரு ஆளு முன்னத்துக்காலை பிடிச்சிக்கிறான். அப்புறம்... அப்புறம்....”

சொல்லுடி...சொல்லுடி...”

சொன்னா யாரும் மயக்கம் போடமாட்டீங்களே"

இல்லை சொல்லு"

சரசுவுக்கு தலை சுற்றிக் கொண்டு வருவது போலிருந்தது.

டனால்னு ஒரு சத்தம். ஆட்டுத்தலை தனியாய்ப் போயிருச்சு. ஒரே ரத்தம்.”

. அப்புறம் யாருமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கொஞ்ச நேரம் மெளனத்திற்கு பிறகு "வெட்டாம ஒரு ஆட்டைக்கூட விடமாட்டாங்களா? என்று கேட்டாள் சரசு.

மஞ்சத்தண்ணி ஊத்துனதும் சிலுக்காம ஒரு ஆடு நிண்டுச்சுடி. பத்திட்டுப் போயா வெட்டமாட்டென்னு பூசாரி வெரட்டினதைப் பார்த்தேன்.”

சரசுவின் சின்னஞ்சிறு முளையில் அவள் கடைசியாகச் சொல்லியது பதிந்தது. 'சரசுக்க்குட்டி மேலே தண்ணியை ஊத்தி ஊத்திப் பழக்கி சிலுக்காம ஆக்கிறலாம்' என்று முடிவெடுத்தாள் சரசு.

அன்றுமுதல் தண்ணீர் கண்ட இடமெல்லாம் ராசுக்குட்டி மேல் அள்ளித் தெளிக்காமல் அவள் போனதே இல்லை. ஆரம்பத்தில் ஒவ்வொரு தடவைக்கும் சிலிர்த்த ராசுக்குட்டி, பின்னாடி சிலிர்க்காமல் நின்றதைப் பார்த்து கைதட்டி மகிழ்வாள்.

ஊர்க் கிணற்றிலே பொண்டுக தண்ணீர் இறைக்கிற போதும், ஒரு வாளி வாங்கி ராசுக்குட்டி தலையில் ஊற்ற அவள் தவறுவதே இல்லை.

'உன் ராசுக்குட்டிக்கு சளி பிடிக்கப்போகுதுடி' என்றுயாராவது சொன்னால் கூட அவள் காதில் போட்டுக் கொள்வதில்லை.

மாசி பிறந்தது. களரிக்கு வரும்படி தம்பிக்கு சொல்லிவிட்டாள் நாகம்மா. காத்தவராயனும் ஒருநாள் முன்னதாக வந்து சேர்ந்தான்.

கிடாய் வெட்டுக்கு வேண்டிய எல்லாச் சாமான்களையும் தயார் செய்தாள் நாகம்மா.

கூடமாட உதவி செய்த சரசு "அம்மா, ராசுக்குட்டியை வெட்ட வேண்டாம்மா" என்று கெஞ்சிக் கொண்டே இருந்தாள்.

என்ன சொன்னாலும் சமாதானமாகாத மகளிடம், “அம்மனுக்கு நேர்ந்ததை செய்யணும்டா-அடுத்து ஒரு குட்டி வாங்கித்தர்றேன். கவலைப்படாதே" என்று ஆசுவாசப்படுத்திப் பார்த்தாள்.

இருந்தாலும் சரசுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியாய் இருந்தது..

அன்று இரவு தூக்கத்தில் கூட 'என் ராசுக்குட்டியை வெட்டாதீங்க' என்று அலறி எழுந்தாள். புருஷனுக்குத் தெரியாமல் மகளை அழைத்துப் போய் கொட்டத்தில் லைட் அடித்து ராசுக்குட்டி உயிரோடு நிற்பதைக் காண்பித்தாள் நாகம்மா.

'தெய்வமே இந்தக் காரியத்தை எப்படி நெறைவேத்தப் போறேன்' என்று நொந்து கொண்டாள் நாகம்மா.

மறுநாள் மதியம் உச்சி வெயிலில் வண்டி பூட்டப்பட்டது. வெயிலைப் பார்க்காமல் புறப்பட்டால் தான் கோயில் போய்ச் சேரமுடியும்.

"வெளியே வேடிக்கை பாக்கணும். நான் கடைசியாத்தான் இருப்பேன்"என்று அடம்பிடித்தாள் சரசு. ராசுக்குட்டி நடந்து போவதைப் பார்த்துக்கிட்டே வரணுங்கிறதுக்காகத்தான் அவ்வாறு கேட்டாள்.

அவள் சொல்லியபடி கடைசியாய்ச் சரசுவை ஏற்றிவிட்டு, ராசுக்குட்டியின் கயிற்றைப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தான் காத்தவராயன்.

அங்காளம்மன் கோயிலில் இந்த வருஷம் அப்படியொரு கூட்டம். தொடர்ச்சியான மழை. ஆற்றிலும் வெள்ளம். அதனால் கிராமங்களில் செழிப்பு. அம்மன் கோயிலைச் சுற்றி நின்ற வண்டிகள் ஐந்நூறுக்கு மேலிருக்கும்.

கோயிலுக்குள் வடமேற்கு மூலையில் தங்க இடம் கிடைத்தது. தென்னைமரம் ஒன்றிருந்தது. அதில் ராசுக்குட்டியைக் கட்டினான் காத்தவராயன்.

பாரி வேட்டையான அன்று கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் ஈஸ்வரரும், சிங்க வாகனத்தில் அம்மனும் புறப்பட்டு ஊர் சுற்றி ஆற்றில் இறங்குவார்கள். கரகாட்டமும் நடக்கும்.

வேடிக்கை பார்க்க சரசுவை அழைத்தான் காத்தவராயன்.

வர மாட்டேன், இங்கேதான் இருப்பேன்" என்ற சரசு, மாமா போனதும் தென்னைமரத்தடியில் நின்றிருந்த ராசுக்குட்டி பக்கத்திலே போய் உட்கார்ந்து விட்டாள். கொட்ட கொட்ட விழிச்சுக்கிட்டே இருந்தவளை ,நாகம்மா தான் கொண்டுபோய்ப் படுக்கவைத்தாள்.

காலையில் நாகம்மா எழுந்து பொங்கள் வைக்கத் தொடங்கினாள். பொங்கலை வைத்து இறக்கியதும், காத்தவராயன் ராசுக்குட்டியை அவிழ்த்துக் கையில் பிடித்தபடி வந்தான். குண்டாச்சட்டி நிறைய மஞ்சத்தண்ணியை நிரப்பி இக்கலில் வைத்தாள்

நாகம்மா.

ராமசாமி ஆட்டின் கழுத்தில் மாலையைப் போட, அது மிரண்டு போய்ப் பார்த்தது.

நீ ஒண்ணும் வர வேணாம்" என்று மகளைத் தடுத்து நிறுத்தி நடந்தார் ராமசாமி.

சரசு பின்னாலே பதுங்கியபடியாய்ப் போனாள்.



நாகம்மா ஆடு வெட்டும் இடத்தில் மஞ்சத்தண்ணி குண்டாவை வைத்துவிட்டு எட்ட வந்து நின்று கொண்டாள். அவள் பின்னாடி மகள் நிற்பதைக் கண்டதும் "உங்கொப்பன் கண்டா அடிப்பாரே" என்று பின்னுக்கு இழுத்தாள்..

ஆடுவெட்டுமிடத்தைப் பார்த்தாள் சரசு.

கொம்புக்கிடையில் கயிறைக் கொடுத்து ஆட்டின் தலையை ஏந்தத் தயாராய் இருந்தான் ஒரு ஆள். முன்கால்களை பின்னுக்கு இழுக்கத் தயாராயிருந்தான் மற்றொரு ஆள். அரிவாளைத் தலைக்கு நேரே பிடித்தபடி நின்றான் பூசாரி.

காத்தவராயன் ராசுக்குட்டியை அமுக்கிப் பிடிக்க, ராமசாமி மஞ்சத்தண்ணியை இரண்டு கையாலும் அள்ளி அதன் தலையில் தெளித்தார். பார்த்துக் கொண்டிருந்த சரசுவுக்கு, அன்றொரு நாள் ஆலமரத்ததடியில் தோழி சொன்னது நினைவுக்கு வர, கண்களை இருட்டிக்கொண்டுவந்தது.அப்புறமென்ன ஆடு ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கும். சிலிர்த்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்துவிடும். சரசு தன் மேல் சாய்வதுபோல் உணர்ந்தாள் நாகம்மா.” சாஞ்சுக்கடி" என்று சொல்லிவிட்டு ஆடு

வெட்டப்போவதைப் பார்த்தாள்.

மஞ்சத்தண்ணி தெளிக்கப்பட்ட ஆடு சிலிர்க்காமல் அசைவற்று நின்றது. ராமசாமி மறுபடியும் மஞ்சத்தண்ணியைத் தெளித்தார். ஆடு சிலிர்க்கவே இல்லை. நாகம்மா கைகளை பிசைந்து கொண்டாள்.

உன் ஆடை வெட்டமாட்டேன். ஏதோ குறைவச்சிருக்கே" என்றான் பூசாரி.

மகள் தடங்கல் பண்ணிக்கிட்டே இருந்தாளே, அதனாலே இருக்குமோ" நாகம்மா மனம் கலங்கினாள்.

என் மருமகப் பொண்ணு வாழையடி வாழையா நல்லா வாழ நான் நேந்துக்கிட்டது. லேசா சிலுத்தாலும் வெட்டிருங்க பூசாரி" என்றான் காத்தவராயன்.

"எனக்காடா புத்தி சொல்றே. போடா, ஆட்டை வெயில்லே கொஞ்சம் காட்டிட்டு மறுபடி கொண்டா" என்றான் பூசாரி.

" போடா அவரு சொல்றாருல்ல. அப்பிடிப்போயி ஆந்தலா பிடிச்சிட்டு வா" என்றார் ராமசாமி.

காத்தவராயன் ஆட்டைப் பிடித்துக் கொண்டு ரோட்டோரமாச் சென்றான்.

ஐயோ, நம்ம மக விழுந்துட்டாங்க- நான் என்ன செய்வேன் "என்று பதறித் துடித்தாள் நாகம்மா.

ராமசாமி ஒடிவந்தார். மகள் அசைவற்று கிடப்பதைப் பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் திரண்டு கொண்டுவந்தது.

ஏய்யா பதறுறீங்க. காத்தோட்டமா அந்த பிள்ளையார் கோயில் திண்டுலே கொண்டுபோய்ப் போட்டு தண்ணி தெளியுங்க.”

சரசுவை அங்கே கொண்டு போய்க் கிடத்தினார்கள். கண்கள் மூடியிருந்தன. உடம்பில் எந்தவித அசைவும் தெரியவில்லை. பற்கள் கட்டியிருந்தன. வாயைத் திறக்கவே முடியவில்லை. முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். எந்த வித மாற்றமும் தெரியவில்லை.

ஏங்க ,என் மகளுக்கு என்னவோ செய்யுது. ஒரு வேனைப்பிடியுங்க. ஆஸ்பத்திரிக்குப் போயிருவோம்".நாகம்மா படபடத்தாள்.

ராமசாமி துண்டாலே மகள் நெற்றியில் வீசினார். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அப்போது பார்த்து "மே...மே" என்று சத்தம் வர, சத்தம் கேட்டமாத்திரத்தில்

சரசுவின் உடம்பில் அசைவு ஏற்படுவதைக் கண்டார் களரிக்கு வந்த பெரியவர் ஒருவர்.


ஏப்பா, ஆடு கத்துற போதெல்லாம் இந்தப் பிள்ளை உடம்பு அசையுதே" என்றார் அவர்.

ராமசாமியும் கவனிக்கத் தொடங்கினார். அந்தக் குரலைக் கேட்ட நாகம்மா, “அந்த ஆடு நம்ம ராசுக்குட்டி தாங்க.”

ஏமா, உங்க ஆடா - வளர்ப்பு ஆடா"

ஆமாங்கய்யா, என் மக வளர்த்த ஆடுங்கய்யா என்றாள் நாகம்மா.

கூட்டத்துக்குள் என்ன நடக்குதென முண்டியடித்துப் பார்த்த காத்தவராயன், சரசு அசைவற்றுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

என் மருமகப் பொண்ணுக்கு என்ன ஆச்சு"

- “காத்தவராயா ஆடு எங்கேடா" கத்தினார் ராமசாமி.

அது ஒரே ஓட்டமா இங்கே வந்துருச்சு. அதைப் பிடிக்கத்தான் இங்கே வந்தேன்.”

வழி விடுங்கய்யா .அந்த ஆடு என்ன செய்யுதுன்னு பார்ப்போம்" என்றார் பெரியவர்.

சரசு பக்கத்தில் வந்த ஆடு, மேமே என்று கத்திக் கொண்டே அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. தன் மூக்கால் சரசு முகத்தை உரசி, மே மே எனக் கத்தியது.

சரசுவின் மூடிய இமைகளில் அசைவு தெரிந்தது.

பொண்ணு பிழைச்சிரும்யா. கண்ணு திறக்கப்போகுது" என்றார் பெரியவர்.

சரசுவின் கண்கள் மெல்ல மெல்லத் திறந்தன. ராமசாமிக்கு உயிர் வந்தது போலிருந்தது.

ரெண்டும் உயிருக்குயிரா பழகியிருக்கு போலிருக்கு. அதனாலே ஆத்தா இது உயிரை வாங்க விரும்பலை. இரக்கம் உள்ளவய்யாஅவள். பிள்ளையையும் ஆட்டையும் கூட்டிட்டு போங்க" என்றார் பெரியவர்.

அதிர்ச்சியில் எழுந்த சரசு 'என் ராசுக்குட்டியை வெட்டிட்டீங்களா? என்று வீறிட்டாள்.

வெட்டலீடா - அது உன் பக்கத்திலே தான் இருக்கு" என்று மகளின் கையை எடுத்து ஆட்டின் தலையில் வைத்தார் ராமசாமி.

கோயிலுக்கு வந்த ஜனம் ஒரு அதிசயமாய் ஆட்டையும் சரசுவையும் முண்டியடித்துப்பார்த்தது..

எங்களுக்காக வந்த சொந்தபந்தங்களா! உங்க எல்லாத்துக்கும் காய்கறிச் சாப்பாட்டை கமகமகக்க போடப்போறேன்.. என் மருமகப் பொண்ணை வாழ்த்திச் சாப்பிட்டுத்தான் போகணும்" என்று கையெடுத்துக் கும்பிட்டான் காத்தவராயன்.


"வந்த இடத்திலே பிள்ளை பிழைச்சதே போதும்யா.எந்த சாப்பாடா இருந்தா என்ன"


அன்று மாலை புறப்பட்ட வண்டிகளின் மேலே ஆட்டின் செப்பைகளெல்லாம் வெயிலில் காய, சரசுக்குட்டி பிடித்த ராசுக்குட்டி ,வண்டி மாட்டின் கழுத்து மணிக்கேற்ப குதிபோட்டுப் போய்க் கொண்டிருந்தது.


- * - * -